
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒலக்கூர் காவல் நிலைய எல்லையான சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பாதிரி கிராமம் ஏரிக்கரை அருகேயுள்ள பஞ்சர் கடையின் எதிரில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்1- ஆம் தேதி கழுத்தை கயிற்றினால் நெறிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடைக்கப்பெற்ற ஆண் பிரேதம் சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் காவல் நிலையத்தில் அன்றைய தினமே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இறந்தவரின் விவரங்கள் பற்றியும் கொலை செய்தவர் யார் என்பது பற்றியும் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஒன்றரை வருடமாக இறந்தவரின் புகைப்படம் அங்க அடையாளங்கள் விவரங்களை பல வகைகளில் தேடி வந்த நிலையில் இறந்தவர் பற்றி தகவல் எதுவும் கிடைக்காததால், விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி இ எஸ்.உமா அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட கண்காணிப்பாளர் ப. சரவணன் அவர்களின் உத்தரவின் படி திண்டிவனம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஐயப்பன், அருள், தலைமை காவலர்கள் தீபன், ஜனார்த்தனன், ராஜ சோழன், திருஞானம், செந்தில்குமார் கோபாலகிருஷ்ணன், பூபாலன் மற்றும் முதல் நிலை காவலர் சிரஞ்சீவி ஆகியவர்கள், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட காவல்துறையுடன் தொடர்பு கொண்டு இறந்து போன நபரின் புகைப்படம் அடங்கிய ஆவணங்கள் பற்றி விசாரணை செய்ததில் இறந்த நபர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற தகவல் கிடைக்கப் பெற்றவுடன் தேனி மாவட்டத்திற்கு விரைந்து சென்று தேனி மாவட்ட காவல் துறையுடன் இணைந்து விசாரணை செய்ததில் இறந்த நபர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் ஏரதிமக்காள் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜோதிமணி (30) என்பது தெரிய வந்தது. மேலும் ஜோதிமணியின் இறப்பு குறித்து விசாரணை செய்ததில் ஜோதிமணிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த உமா என்பவருக்கும் பழக்கம் இருந்ததாகவும் உமாவிற்கு திருமணம் முடிந்த பிறகும், ஜோதிமணி உமாவை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் உமா அவரது பெற்றோர்களான மாரியப்பன், பஞ்சவர்ணம் ஆகிய மூவரும் சேர்ந்து ஜோதி மணியை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி கடந்த 2024 ஆம் வருடம் மார்ச் மாதம் 31 ஆம் தேதி இரவு டி என் 19 1767 என்ற பதிவின் கொண்ட வாடகை டாட்டா ஏசி வாகனத்தின் மூலம் ஜோதி மணியை அழைத்துக்கொண்டு வந்து ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாதிரி கிராம ஏரிக்கரை அருகே உள்ள நந்தகுமார் என்பவரது பஞ்சர் கடை அருகே வாகனத்தை நிறுத்தி ஜோதி மணியின் கழுத்தை கயிறினால் நெறித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. எனவே தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் ஏராதி மக்காள் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கொலையாளிகளான மாரியப்பன் (58) த/பெ வெள்ளிமலை, உமா (25)க/பெ ஈஸ்வரன், பஞ்சவர்ணம் (43)க/பெ மாரியப்பன் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொலைக்காக பயன்படுத்திய டி என் 19 1767 பதிவெண் கொண்ட டாட்டா ஏசி வாகனம் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.