
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஏதா நெமிலி பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி ஜெயந்தி. கட்டிட வேலை செய்து வந்த இவர் தனது இரு சகோதரர்களுடன் கடந்த 15 ஆம் தேதி இரவு கட்டிட வேலையை முடித்து விட்டு வீடு திரும்பும் வழியில் அகூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற பொழுது அடையாளம் தெரியாத கார் பின்னால் மோதியதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர் பலத்த காயமடைந்த ஜெயந்தி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய காரை கடந்த 10 தினங்களாக வெள்ளிமேடுபேட்டை போலீசார் கண்டுபிடிக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் இறந்த ஜெயந்தியின் உடலை திண்டிவனம் – வந்தவாசி நெடுஞ்சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அகூர் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், ஏதாநெமிலி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், போலீஸ்காரர் மணிகண்டன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மேல்ஆதனூர் மனோகரன், ஏதாநெமிலியை சேர்ந்த பிரகாஷ், நவநீதகிருஷ்ணன் வினோத், சிவக்குமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.