
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சமீப காலமாக திண்டிவனம் நோக்கி வருகின்ற ரயில்களின் மீது பகல், இரவு என திடீர் திடீரென்று கல்லெறியும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து ரயில் ஓட்டுநர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்ததின் பேரில் திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் குமார் தலைமையில், திண்டிவனம் அடுத்த சாரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.எஸ்.ஐ., தேசி, ரயில்வே தண்டவாளங்களை தேவையில்லாமல் கடந்து செல்ல மாட்டோம், ரயில் தண்டவாளங்களில் கற்களையோ, கடினமான பொருட்களையோ வைக்க மாட்டோம், அதேபோல் ரயில்கள் மீது கல் எறிய மாட்டோம், மேலும் தங்களது நண்பர்களிடமும் இதனை அறிவுறுத்தி கூறுவோம் உள்ளிட்ட பல்வேறு வகையான விழிப்புணர்வு வாசகங்களை கூறி மாணவ, மாணவிகளை உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.எஸ்.ஐ. சுரேசன், பள்ளி தலைமை ஆசிரியை சுமதி. உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தராமன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.